திண்டிவனம் அருகே தறிகெட்டு ஓடிய பஸ் பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஆட்டோ டிரைவர் பலி


திண்டிவனம் அருகே தறிகெட்டு ஓடிய பஸ் பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2018 5:00 AM IST (Updated: 12 Aug 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே தறிகெட்டு ஓடிய பஸ் பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஆட்டோ டிரைவர் பலியானர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று மாலை சென்னையில் இருந்து ஒரு அரசு பஸ் மேல்மலையனூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ்சை உத்திரமேரூரை சேர்ந்த ராமர்(வயது 55) என்பவர் ஓட்டிவந்தார். பஸ் திண்டிவனம் அருகே கோனேரிகுப்பம் என்கிற இடத்தில் வந்த போது, பின்பக்க டயர் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால் டிரைவர் ராமர் சாலையோரமாக பஸ்சை நிறுத்தினார்.

தொடர்ந்து, அந்த பஸ்சில் வந்த பயணிகள் அனைவரையும், அந்த வழியாக மேல்மலையனூருக்கு சென்ற மற்ற சிறப்பு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்க கண்டக்டர் முடிவு செய்தார். இதற்காக பயணிகள் அனைவரும் பழுதான பஸ்சின் அருகே, சாலையோரம் காத்துக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், அந்த வழியாக சென்னையில் இருந்து மேல்மலையனூர் நோக்கி சிறப்பு பஸ் ஒன்று வந்து. அதை செஞ்சி பரதன்தாங்கலை சேர்ந்த லட்சுமணன்(35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது பழுதாகி நின்ற பஸ்சின் கண்டக்டர், அந்த பஸ்சை மறித்தார்.

இந்த நிலையில் லட்சுமணனின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் தறிக்கெட்டு ஓடி, சாலையோரம் காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் அனைவரம் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இருப்பினும், அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரப்பன்(55), அவருடைய மனைவி அஞ்சலை(48), சென்னை மாங்காடு பார்த்தசாரதி ராஜேஷ்வரி(33) ஆகியோர் மீது மோதி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் நின்றது.

இதில் பஸ்சின் முன்சக்கரத்துக்கு அடியில் சிக்கிய வீரப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த அஞ்சலை, ராஜேஷ்வரி ஆகியோர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ள சென்ற பக்தர் தனது மனைவியின் கண் எதிரேயே பலியாகி இருப்பது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Related Tags :
Next Story