பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுக்க குமாரசாமி-டி.கே.சிவக்குமார் ஆலோசனை
கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுக்க குமாரசாமியும், டி.கே.சிவக்குமாரும் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், அதுகுறித்து கட்சியின் மேலிட தலைவர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார்.
இதனால் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வரமுடியாமல் போனதால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க மறைமுகமாக காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி தொடர்ந்து இருந்தால், அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு 11 முதல் 13 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்றும் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆபரேஷன் தாமரை மூலமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்கும் நடவடிக்கையில் பா.ஜனதா இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை எந்த விதமான பிரச்சினையும் இன்றி முன்னெடுத்து செல்லவும், ஆபரேஷன் தாமரை திட்டத்திற்கும் எதிராகவும், பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தங்கள் பக்கம் இழுக்க முதல்-மந்திரி குமாரசாமியும், மந்திரி டி.கே.சிவக்குமாரும் தீர்மானித் திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுப்பது குறித்து குமாரசாமியும், டி.கே.சிவக்குமாரும் முதற்கட்டமாக ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தெரிகிறது.
இதுபற்றி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மூத்த தலைவர்களுடன் கருத்து கேட்டும், அவர்களது ஆலோசனைகளை பெற்ற பிறகு தான் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுப்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று குமாரசாமியும், டி.கே.சிவக்குமாரும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளித்தால் மட்டுமே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story