நாகர்கோவில் அருகே பரிதாபம்: தறிகெட்டு ஓடிய அரசு பஸ் மோதி வங்கி பெண் ஊழியர் சாவு
நாகர்கோவில் அருகே தறிகெட்டு ஓடிய அரசு பஸ் மோதி வங்கி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு வீரநாராயணமங்கலம், திருப்பதிசாரம் வழியாக தினமும் காலையில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பஸ் நேற்று காலை வழக்கம்போல் ஆரல்வாய்மொழியில் இருந்து புறப்பட்டது. பஸ்சை, கிரிதரன் என்பவர் ஓட்டினார். சுமார் 30 பயணிகள் அந்த பஸ்சில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் பஸ், வீரநாராயணமங்கலத்தை கடந்து பழையாற்று கால்வாய்(சானல்) கரையோர சாலையில் வந்துகொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. குறுகிய சாலை என்பதாலும், மிகவும் வேகமாக வந்ததாலும் பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் சாலையில் இருந்து இறங்கி வலதுபுறம் உள்ள பழையாற்று கால்வாயில் விழுவது போல சென்றுள்ளது. இதைப் பார்த்து பயணிகள் அலறினர். உடனே கால்வாயில் விழாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை இடப்புறமாக திருப்பினார். இதனால் பஸ் கால்வாயில் விழாமல் தப்பியது. ஆனாலும் ஒரு துரதிஷ்டமான சம்பவம் அங்கு நடந்துவிட்டது.
அதாவது அதே சாலையில் வீரநாராயணமங்கலம் நோக்கி ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டு இருந்தார். அரசு பஸ் தறிகெட்டு ஓடி வருவதை பார்த்த அந்த இளம்பெண் உடனே தனது ஸ்கூட்டரில் இருந்து இறங்கி சாலையின் இடதுபுறத்தில் மிகவும் ஓரமாக ஸ்கூட்டரை பிடித்தபடி ஒதுங்கி நின்றார்.
ஆனால் கால்வாயில் விழாமல் காப்பாற்றிய டிரைவரால் தொடர்ந்து பஸ்சை கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரோடு நின்று கொண்டிருந்த அந்த இளம்பெண் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன் சக்கரத்தில் ஸ்கூட்டர் சிக்கி சுக்கு நூறாக நொறுங்கியது. ஸ்கூட்டருக்கு அடியில் இளம்பெண் மாட்டிக் கொண்டார். எனினும் பஸ் அதோடு நிற்கவில்லை. ஸ்கூட்டர் மீது இடித்த வேகத்தில் சுமார் 20 அடி தூரம் ஸ்கூட்டரை இழுத்துச் சென்றது. மேலும் பஸ்சின் வலதுபுற டயர் ஸ்கூட்டர் மீது ஏறி இறங்கியது. பின்னர் அந்த பஸ் சாலையின் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது.
பள்ளத்தில் பாய்ந்த பஸ் அப்படியே நின்று கொண்டது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் பஸ்சுக்கு கீழே ஒரு இளம்பெண்ணின் உயிர் ஊசலாடியதை யாரும் பார்க்க தவறிவிட்டனர்.
இதற்கிடையே இந்த கொடூர காட்சியை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு நின்று பஸ்சுக்கு அடியில் சிக்கியிருந்த இளம்பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் இளம்பெண்ணின் கால்கள் மீது ஸ்கூட்டர் நொறுங்கிய நிலையில் கிடந்தது. மேலும் ஸ்கூட்டர், பஸ்சின் 2 டயர்களுக்கும் இடையே சிக்கியிருந்தது.
இதன் காரணமாக இளம்பெண்ணை மீட்க சிரமம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த பதைபதைக்கு சம்பவம் பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இளம்பெண்ணை மீட்கும் பணி வேகமாக நடந்தது. எப்படியாவது இளம்பெண்ணை உயிருடன் மீட்டு விடவேண்டும் என்று அனைவரும் இணைந்து போராடினர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் பஸ்சை சற்று நகர்த்திய பிறகுதான் இளம்பெண்ணை மீட்க முடிந்தது. எனினும் இந்த மீட்பு பணி பலன் அளிக்கவில்லை. ஏன் என்றால் பஸ்சுக்கு அடியில் சிக்கியதில் படுகாயம் அடைந்து இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் அந்த பகுதி சோகமயமாக காட்சி அளித்தது.
அதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் உடலை ஆரல்வாய்மொழி போலீசார் கைப்பற்றினர். பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பலியான இளம்பெண் தேரேக்கால்புதூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த இந்து (வயது 24) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்துவின் தந்தை குமாரவேலு. இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தாய் கிருஷ்ணகுமாரி. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியின் மகளான இந்து, எம்.காம் பட்டதாரி ஆவார். இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றினார். வங்கியில் இருந்து முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நேரில் சென்று ஓய்வூதியத்தை வழங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கண்டமேட்டு காலனியில் ஓய்வூதியம் பெறும் முதியவர்களின் கைரேகையை பதிவு செய்வதற்காக தனது ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
இதனையடுத்து இந்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் கிரிதரனையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விபத்து பற்றி கேள்விப்பட்ட குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உடனே சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். விபத்து நடந்தது குறித்து கேட்டறிந்தார். பின்னர் பலியான இந்துவின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்துவதாக கூறினார்.
விபத்து காரணமாக நேற்று அந்த சாலையில் பிற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருப்பதிசாரம் அருகே சாலையில் கற்களை வைத்து தடுப்பு அமைத்திருந்தனர்.
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் உள்ளது. திருப்பதிசாரத்தில் இருந்து வீரநாராயணமங்கலத்துக்கு செல்லும் சாலை மிக குறுகலாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது. ஏன் எனில் சாலையின் வலதுபுறம் 10 அடி பள்ளத்தில் பழையாற்று கால்வாய்(சானல்) ஓடுகிறது. இடதுபுறம் சுமார் 5 அடி அளவுக்கு பள்ளம் இருக்கிறது. இந்த இரண்டு பள்ளங்களுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பார்க்கும்போது பழையாற்று கால்வாயில் கரை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் சாலையில் சிறிய சிறிய வளைவுகளும், பள்ளங்களும் உள்ளன. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்வதற்கு மட்டுமே இந்த சாலை உகந்தது.
அப்படி இருக்க இந்த சாலையில் கனரக வானங்கள் செல்கின்றன. அது மட்டும் இன்றி அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்களும் இந்த சாலையில் இயக்கப்படுகின்றன. இவ்வாறு ஆபத்து நிறைந்த சாலையை இவ்வளவு நாட்களாக யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது விபத்து ஏற்பட்டு வங்கி ஊழியர் இந்து பரிதாபமாக பலியாகிய சம்பவத்துக்கு பிறகு தான் இந்த சாலையின் ஆபத்தை மக்களும், அதிகாரிகளும் உணர்ந்திருக்கிறார்கள். எனவே இனியாவது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விபத்துக்கு காரணமான பஸ்சை கிரிதரன் என்பவர் ஓட்டினார். இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள மாராயபுரத்தை சேர்ந்தவர். இவர் இதற்கு முன் சென்னையில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு மார்த்தாண்டத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ராணிதோட்டம் பணிமனைக்கு அவர் புதிய டிரைவர் என்பதால் வீரநாராயணமங்கலம் சாலையின் தன்மை பற்றி அவர், சரியாக அறிந்திருக்கவில்லை. இதனால் தான் பஸ்சை வேகமாக ஓட்டியுள்ளார். ஆனால் திருப்பத்தில் அவரால் பஸ்சை கட்டுப்படுத்த இயலாமல் போனது. கால்வாயில் விழாமல் தடுப்பதற்காக இடதுபுறம் நோக்கி திருப்பியுள்ளார். ஆனால் அந்த முடிவு இந்துவின் உயிரை காவு வாங்கிவிட்டது. எனவே இதுபோன்ற குறுகலான சாலையில் இயக்கப்படும் பஸ்களில் அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணிக்கு அமர்ந்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.