பாளையங்கோட்டை மத்திய சிறையில் மனைவி, குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த கைதிகள்


பாளையங்கோட்டை மத்திய சிறையில் மனைவி, குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த கைதிகள்
x
தினத்தந்தி 13 Aug 2018 3:30 AM IST (Updated: 12 Aug 2018 11:47 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை மத்திய சிறையில் மனைவி, குழந்தைகளுடன் கைதிகள் பேசி மகிழ்ந்தனர்.

நெல்லை,


தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க யோகா உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் மாதந்தோறும் கைதிகள் தங்களுடைய மனைவி, குழந்தைகளை சந்தித்து பேசி மகிழ வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக சிறைத்துறை அதிகாரிகள் மீண்டும் கைதிகளை, குடும்பத்தினருடன் சந்திக்க வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சிறப்பு நேர்காணல் நடைபெற்றது.
இதில் ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட மொத்தம் 50 கைதிகளின் குடும்பத்தினர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் சிறையில் வாடும் தங்களது குடும்ப உறுப்பினரை சந்தித்தனர்.

அப்போது நீண்ட நாட்களாக குழந்தைகளை பார்க்க முடியாமல் தவித்த கைதிகள், தங்களுடைய குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றன. தொடர்ந்து கைதிகள் தங்களுடைய மனைவியிடம் பேசி மகிழ்ந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இவ்வாறு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கூறுகையில், “சிறையில் உள்ள தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளை குறிப்பிட்ட நாட்களில் உறவினர்கள் மனு கொடுத்து பார்த்து செல்வார்கள். தற்போது சிறப்பு நிகழ்வாக கைதிகளின் மனஅழுத்தத்தை குறைக்க குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை அருகில் அமர்ந்து பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் நன்னடத்தை கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் அவர்கள் மனஅழுத்தம் இன்றி, அமைதியாகவும், நல்ல முறையில் செயல்படவும் வாய்ப்பு ஏற்படும். இந்த நடைமுறை மாதத்தில் ஒரு நாள் செயல்படுத்தப்படும்” என்றார். 

Next Story