திருச்சி கே.கே.நகரில் ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


திருச்சி கே.கே.நகரில் ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 3:45 AM IST (Updated: 13 Aug 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கே.கே.நகரில் ஓய்வுபெற்ற பாய்லர் ஆலை அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் ஆனந்தன் நகர் பகுதியில் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வளர்மதி (வயது60). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வளர்மதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வளர்மதி நிலை குலைந்து போனார்.

இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் வளர்மதி புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்மநபர்கள் உருவம் தெளிவாக தெரியவில்லை.

இதையடுத்து கே.கே.நகர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story