மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் துறைமுக கடற்கரையில் தூய்மை பணி + "||" + Cleaning work on the coast of Thoothukudi port

தூத்துக்குடியில் துறைமுக கடற்கரையில் தூய்மை பணி

தூத்துக்குடியில் துறைமுக கடற்கரையில் தூய்மை பணி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி, 


தூத்துக்குடி வ.உ.சி கடற்கரையில் ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் மெகா தூய்மை பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் மற்றும் அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கவும், வருங்கால சந்ததிகள் எத்தகைய விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதியை ஏற்க வேண்டும். மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களிடமும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், தலைவர் பாலு, உதவி பொதுமேலாளர் திருச்செந்தில் நாயகம், வ.உ.சி. துறைமுக செயற்பொறியாளர் பாலாஜி ரத்தினம், தேசிய தகவல் மைய மாவட்ட மேலாளர் சீனிவாசன், ஸ்பிக்நகர் அரிமா சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சீனிவாஸ், பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.