மாவட்ட செய்திகள்

உவரியில் பரபரப்பு கடலில் ராட்சத அலையில் சிக்கிய தந்தை-மகன் + "||" + Uvari Thriller; The father-son of the giant sea wave

உவரியில் பரபரப்பு கடலில் ராட்சத அலையில் சிக்கிய தந்தை-மகன்

உவரியில் பரபரப்பு கடலில் ராட்சத அலையில் சிக்கிய தந்தை-மகன்
உவரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய தந்தை-மகனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திசையன்விளை,


கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஜேம்ஸ் டவுனை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 47). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் வேன் மூலம் நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். மாலை 3 மணி அளவில் சுடலைமணியின் மகன்கள் மகேஷ்வரன் (17), மனோஜ் (14), மதிபாலன் (13) ஆகிய 3 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது 3 பேரும் கடலின் ஆழப்பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலைகள் எழும்பின. அந்த அலைகளில் 3 பேரும் எதிர்பாராதவிதமாக சிக்கினர். இதில் மகேஷ்வரன், மனோஜ் ஆகிய 2 பேரும் போராடி கரைக்கு வந்துவிட்டனர். ஆனால் மதிபாலனால் கரைக்கு வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை கரையில் இருந்து பார்த்த சுடலைமணி பதறிப்போனார். உடனே அவர் மதிபாலனை காப்பாற்ற கடலுக்குள் இறங்கினார். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த ராட்சத அலையில் சுடலைமணியும் சிக்கினார். 2 பேரும் தத்தளித்தப்படி உயிருக்கு போராடியவாறு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். உடனே கரையில் இருந்தவர் இதுகுறித்து உவரி போலீசாருக்கும், திசையன்விளை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் கடலில் இறங்கி, தத்தளித்து கொண்டிருந்த சுடலைமணி, மதிபாலன் ஆகிய 2 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.