மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபர் கைது


மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 9:30 PM GMT (Updated: 12 Aug 2018 7:20 PM GMT)

நெல்லையில் மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததால் மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,


நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். தொழில் அதிபர். இவருடைய மகள் செல்வி (வயது 30). இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சரவணன் (32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தூத்துக்குடியில் கணவன்-மனைவி வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வி வண்ணார்பேட்டையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு செல்வி, நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கிடையே சரவணன் அடிக்கடி வண்ணார்பேட்டைக்கு வந்து மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். மேலும் அதுதொடர்பாக அவ்வப்போது தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சரவணன் நேற்று முன்தினம் நள்ளிரவு வண்ணார்பேட்டையில் உள்ள செல்வியின் வீட்டின் முன்பு வந்தார். அங்கு வீட்டை நோக்கி 2 பெட்ரோல் குண்டுகளை எறிந்ததாக தெரிகி றது. இதில் வீட்டின் முன்பு நின்றிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் சேதம் அடைந்தது. வீட்டின் முன்பு தொங்க விடப்பட்டிருந்த திரைச்சீலையும் கருகி உள்ளது.

இந்த சத்தம் கேட்டு செல்வியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீப்பற்றியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சரவணன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பாளையங்கோட்டையில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story