பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணி எரித்துக்கொலை; எலும்புகளை சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம் என்ஜினீயர் கைது


பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணி எரித்துக்கொலை; எலும்புகளை சாக்குமூட்டையில் கட்டி வீசிய கொடூரம் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணி எரித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே உள்ளது ஒலையக்குன்னம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அழகிரி. விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வயலுக்கு சென்றார். அப்போது வயலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி பியாரே பூட்டியார்பெர்னாண்டோரெனே (வயது68) என்பவரின் பாஸ்போர்ட், டைரி உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பை கிடந்தது.

இதைபார்த்த அழகிரி உடனடியாக மதுக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பையை கைப்பற்றி அதில் என்ன இருக்கிறது? என பார்த்தனர். அப்போது அந்த பையில் மதுக்கூரை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருடைய மகன் திருமுருகன் (வயது29) என்பவரின் முகவரி எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் திருமுருகனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதலில் அவரை தனக்கு யார் என்று தெரியாது என முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி உள்ளார். இருப்பினும் போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமுருகன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் 2011 வரை பி.டெக் படித்தேன். அப்போது ஒருநாள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றேன். அங்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியாரே பூட்டியார்பெர்னாண்டோரெனே என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நண்பர்கள் ஆனோம். மேலும் பியாரே பூட்டியார்பெர்னாண்டோரெனே தமிழகம் வரும் போது தன்னை தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி 2 பேரும் பல இடங்களுக்கு சென்றுவந்துள்ளோம். எங்களுக்குள் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்தது.

அதன்படி கடந்த மாதம் 31-ந்தேதி பியாரே பூட்டியார்பெர்னாண்டோரெனே சுற்றுலாவாக சென்னை வந்தார். 3-ந்தேதி வரை சென்னையில் தங்கி இருந்த அவர் பின்னர் திருச்சி வந்தார். திருச்சியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர் 5-ந்தேதி என்னை தொடர்பு கொண்டார்.

இதையடுத்து திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள எனது வீட்டிற்கு வந்தேன். அங்கு வைத்து 2 பேரும் மது குடித்தோம். பின்னர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சுமூச்சின்றி நினைவிழந்து மயங்கி விழுந்தார். அவரை எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால் அவர் இறந்து விட்டார்.

இதனால் அவருடைய சடலத்தை என்ன செய்து என்று தெரியாமல் திகைத்தேன். பின்னர் எனது வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக்கொண்டு பியாரேபூட்டியார்பெர்னாண்டோரெனே உடலை எரித்தேன். எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல் மற்றும் எரியாமல் கிடந்த சதைப்பகுதியை 3 சாக்குகளில் அடைத்து மூட்டையாக கட்டி மதுக்கூரில் இருந்து வாட்டாக்குடி செல்லும் சாலையில் இரட்டை புளியமரத்தடி அருகே உக்கடை வாய்க்காலிலும், பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு வயலிலும் போட்டு வந்து விட்டேன் என கூறி உள்ளார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் இருந்த உடலின் சதை பகுதிகள், எலும்பு மற்றும் சாம்பல் ஆகியவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வாட்டாக்குடி உக்கடை கிராம நிர்வாக அதிகாரி தனவேல் கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் திருமுருகன் மீது கொலை செய்ததாகவும் (இந்திய தண்டனை சட்டம் 302பிரிவு), தடயங்களை பெட்ரோல் ஊற்றி அழித்ததாகவும் (இந்திய தண்டனை சட்டம் 201பிரிவு) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

Next Story