தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 1-வது மின்உற்பத்தி எந்திரத்தில் நேற்று முன்தினம் இரவு கொதிகலன் குழாயில் திடீரென ஓட்டை விழுந்தது. உடனடியாக மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அனல்மின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் மின்உற்பத்தி எந்திரம் மின்உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் நேற்று காலை காற்றாலை மூலம் சுமார் 3 ஆயிரத்து 900 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று பல இடங்களில் மழை பெய்து வருவதாலும், விடுமுறைநாள் என்பதாலும் மின்சாரம் தேவை குறைந்தது.
இதனால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் உள்ள 3-வது மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது. தற்போது 1, 3-வது எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் மொத்தம் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி குறைந்து உள்ளது. மற்றபடி 2, 4, 5 ஆகிய 3 மின்உற்பத்தி எந்திரங்களிலும் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story