வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2018 3:00 AM IST (Updated: 13 Aug 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

ஆண்டிப்பட்டி,

வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தற்போது 61 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மதுரை மாவட்ட பாசனத்துக்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், தொடர் மழை மற்றும் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

அணை நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயரும் போது, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் அணையில் இருந்து ஆற்று வழியாக தண்ணீர் திறக்கப்படவே இல்லை.

இதனால் வைகை அணையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிப்பட்டி, புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துவிட்டது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் நிலவுகிறது. இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61 அடியாக உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அணைக்கரைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், வைகை அணைக்கு மிக அருகில் இருக்கும் அணையில் இருந்து பல ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. வைகை அணையை நம்பி இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் நடைபெறுகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஆண்டுகளாக ஆறு வறண்டு காணப்படுவதால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளும் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மதுரை மாவட்ட விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது போல, எங்கள் பகுதிக்கும் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

Next Story