மக்களின் மன நிலையை புரிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் விக்கிரமராஜா பேச்சு


மக்களின் மன நிலையை புரிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் விக்கிரமராஜா பேச்சு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் மன நிலையை புரிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த நாடார் சங்க விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட நாடார் சங்கம் சார்பில் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா, சங்கத்தின் 28-வது ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.சித்திரவேல் நாடார் தலைமை தாங்கினார். ஏ.டி.பாலகிருஷ்ணன் நாடார் காமராஜர் படத்தை திறந்து வைத்தார். சங்க பொருளாளர் செல்லசாமி நாடார் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தை ஆண்ட காமராஜர் மக்களின் மனதை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சி காலத்தில் தான் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டது. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திய காமராஜர் தற்போதும் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மக்களின் மன நிலையை அறிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் நாம் முன்வந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகரும், 7 முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவருமான எம்.காமராஜ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயலாளர் ஆம்பூர் கிருஷ்ணன், அனைத்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க முன்னாள் துணைத்தலைவர் செல்வம் நாடார் நன்றி கூறினார். 

Next Story