கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருச்சியில் தி.மு.க., தோழமை கட்சியினர் அமைதி ஊர்வலம்


கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருச்சியில் தி.மு.க., தோழமை கட்சியினர் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருச்சியில் தி.மு.க., தோழமை கட்சியினர் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி திருச்சியில் நேற்று தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தில்லைநகர் ஐந்தாவது குறுக்கு தெருவில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வாகனத்தில் கருணாநிதி படத்தை வைத்து அதற்கு மாலை அணிவித்து இருந்தனர். இந்த வாகனத்திற்கு பின்னால் திருச்சி சிவா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம், த.மு.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

ஊர்வலத்தில் நடந்து சென்றவர்கள் கருப்பு சின்னம் அணிந்து இருந்தனர். ஊர்வலம் சாஸ்திரி சாலை, கரூர் பைபாஸ் சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கருணாநிதி படத்திற்கு நேரு மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தபோது அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இரங்கல் கூட்டத்தில் பேசிய நேரு, தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி திருச்சி நகரின் வளர்ச்சிக்கு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் பல்வேறு சாதனைகள் பற்றிய ஒரு நிரந்தர கண்காட்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட இருப்பதாக கூறினார். வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பத்திரிகை ஆசிரியர்கள் புகழஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால், அது தொடர்பான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

Next Story