கோர்ட்டு அமீனா பணிக்கான தேர்வு: 15 காலி இடத்துக்கு 5 ஆயிரத்து 843 பேர் போட்டி - தேர்வு அறைகளை நீதிபதிகள் கண்காணித்தனர்


கோர்ட்டு அமீனா பணிக்கான தேர்வு: 15 காலி இடத்துக்கு 5 ஆயிரத்து 843 பேர் போட்டி - தேர்வு அறைகளை நீதிபதிகள் கண்காணித்தனர்
x
தினத்தந்தி 12 Aug 2018 11:15 PM GMT (Updated: 12 Aug 2018 9:40 PM GMT)

வேலூரில் கோர்ட்டு அமீனா பணிக்கான தேர்வு நடந்தது. 15 காலி இடத்துக்கு 5 ஆயிரத்து 843 பேர் போட்டியிட்டனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் அமீனா, கணினி ஆபரேட்டர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 45 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கணினி ஆபரேட்டர், தட்டச்சர், இரவு காவலர் பணிக்கான தேர்வு கடந்த 8-ந் தேதி நடக்க இருந்தது. அந்த தேர்வு வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. அதே போன்று அமீனா பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடைபெற இருந்தது.

அந்த தேர்வு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அமீனா பணிக்கான 15 காலி இடத்துக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 30 நிமிடங்கள் தேர்வு என 5 கட்டங்களாக தேர்வுகள் நடந்தது.

தேர்வு அறையை வேலூர் மாவட்ட அமர்வு நீதிபதி ஆனந்தி பார்வையிட்டார். குடும்ப நல நீதிபதி லதா, தொழிலாளர் நல நீதிபதி செல்வசுந்தரி, தலைமை குற்றவியல் நீதிபதி பாரி, மகளிர் விரைவு நீதிபதி செல்வம், ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் நீதிபதி தீனதயாளன் ஆகியோர் தேர்வு அறைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அமீனா பணிக்கான 15 காலி இடத்துக்கு 5 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுதினார்கள். 10-ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையில் நடந்த இத்தேர்வை என்ஜினீயர், இளங்கலை, முதுகலை பட்டம் பயின்றவர்கள் ஏராளமானோர் எழுதினார்கள்.

இத்தேர்வை எழுத விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வர்கள் வந்திருந்தனர்.

Next Story