சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
குமரி மாவட்டத்தில் வருகிற 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வருகிற 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அதன்படி குமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான 15–ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டம் உள்பட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது. அதோடு பொதுமக்களுக்கு தேவையான விவரங்களை அளித்திட அனைத்துத் துறை அலுவலர்களும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.