ஸ்கூட்டர் மீது லாரி மோதல்: பிளஸ்-2 மாணவி பலி; சித்தி படுகாயம்


ஸ்கூட்டர் மீது லாரி மோதல்: பிளஸ்-2 மாணவி பலி; சித்தி படுகாயம்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:00 AM IST (Updated: 13 Aug 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் பிளஸ்-2 மாணவி பலியானர். அவருடைய சித்தி படுகாயம் அடைந்தார். ஆலய திருவிழாவுக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

சின்னாளபட்டி, 


திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் அருள் ஞான பிரகாசம். அவருடைய மகள் கேசியாராணி (வயது 17). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது சித்தி, அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த அருள் ஞானபாத்திமா (36). இவர் தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் வேலை செய்கிறார்.

இவர்கள் 2 பேரும் அ.வெள்ளோட்டில் நடைபெறும் சந்தியாகப்பர் ஆலயதிருவிழாவுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை ஸ்கூட்டரில் திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை கேசியாராணி ஓட்டினார். அ.வெள்ளோடு காபிகடை பிரிவு என்னுமிடத்தில் இவர்கள் சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கேசியாராணி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருள் ஞானபாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஸ்கூட்டர் மீது மதுரை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோதியதாக கூறி அருகில் இருந்தவர்கள் சிலர் ஒரு லாரியை பிடித்து வைத்தனர். சிலர் ஸ்கூட்டர் மீது மினி லாரி ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறினர்.

போலீசாரின் விசாரணையில் கன்டெய்னர் லாரி மோதியதற்கான தடயம் இல்லை. மேலும் அதன் டிரைவர் தன்னுடைய லாரி மோதவில்லை என கூறி வருகிறார். எனவே ஸ்கூட்டர் மீது மோதிய லாரி எது? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை நேரத்தில் அதிகளவு வாகனம் செல்லும் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஸ்கூட்டர் மீது எந்த லாரி மோதியது? என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


Next Story