தேசிய வாக்காளர் பதிவேடு பதிவேற்ற பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்
தேசிய வாக்காளர் பதிவேடு பதிவேற்ற பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் பதிவேட்டினை கணினியில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வட்டார, நகராட்சி, மாநகராட்சி வாரியாக தேசிய மக்கள் தொகை பதிவேடுகளுக்கான முதல்கட்ட பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு குடும்ப பட்டியல் கணக்கெடுப்பின்போது நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு களப்பணிகள் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. சுருக்க பட்டியல் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது தனிநபர் விவரங்கள் அடங்கிய கணக்கெடுப்பாளர், பகுதிவாரியான புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்களை மேம்படுத்துதல் பணி நடைபெறும்போது பொறுப்பு அதிகாரி தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
ஆதார் எண், செல்போன் எண், தனிநபர் விவரங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களை மற்றவர்கள் பார்க்கவோ, நகல் எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக்கூடாது. பொறுப்பு அதிகாரிகள் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தையும் சீர்படுத்தி பட்டியலிட்ட பின்னரே மையத்தின் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். திருத்தங்கள் செய்து முடித்த பிறகு அப்பகுதியில் புதிய குடும்பமோ அல்லது குடும்ப நபர்களோ இருப்பின் அதற்குரிய விவரங்களையும் உள்ளடு செய்ய வேண்டும். இப்பணிகள் அனைத்தும் 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மக்கள் தொகை கணக்கெடுப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story