விமான கண்காட்சியை லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு திட்டம் - குமாரசாமி பேட்டி


விமான கண்காட்சியை லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு திட்டம் - குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2018 5:27 AM IST (Updated: 13 Aug 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து லக்னோவுக்கு இடம் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குமாரசாமி கூறினார்.

உப்பள்ளி,

உப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா கோர்ட்டு கட்டிட திறப்பு விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ் பெற்ற விமான கண்காட்சியை உத்தரபிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.

விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் பெங்களூருவில் உள்ளது. ஆயினும் இந்த விமான கண்காட்சியை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆயினும் இதுபற்றி மத்திய அரசின் ராணுவத்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எங்களுக்கு வரவில்லை.

பெலகாவியில் உள்ள கர்நாடக மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஹாசனுக்கு மாற்றப்பட்டது. இந்த முடிவை பொதுப்பணித்துறை எடுத்துள்ளது. உலக வங்கி திட்ட பணிகள் முடிவடைந்துவிட்டதால் அதன் அலுவலகம் ஹாசனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற முடிவுகளை சம்பந்தப்பட்ட துறைகள் தான் எடுக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

Next Story