சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த ஓட்டல் 12 மணி நேரத்துக்குள் இடித்து தரைமட்டம்


சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த ஓட்டல் 12 மணி நேரத்துக்குள் இடித்து தரைமட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2018 5:41 AM IST (Updated: 13 Aug 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த ஓட்டல் 12 மணி நேரத்துக்குள் மும்பை மாநகராட்சியால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள சாகர் கிராமம், சுதார் பக்டி பகுதியில் அடுக்குமாடி ஓட்டல் ஒன்று கட்டப்பட்டு வந்தது.

இந்த கட்டிடம் சட்ட விரோதமான முறையில் கட்டப்படுவதை அறிந்து கொண்ட மாநகராட்சியினர், இதை இடித்து தரைம ட்டமாக்கும் வேலையில் இறங்கினர். இதன்படி 12 மணி நேரத்திற்குள் அந்த கட்டிடம் இடித்து தள்ளப்பட்டது. இந்த கட்டிடத்தில் 3 மாடிகளுக்கான வேலை முடிந்திருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இடிக்கப்பட்ட ஓட்டல் கட்டிடம் 30 அறைகளுடன் பிரமாண்டமாக கட்டப் பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் இதில் சட்டவிரோத கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்குள் அங்கு 10 ஆயிரம் சதுர அடியில் 3 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து அவர்களுக்கு கட்டிட வேலைகளை நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கட்டிடத்தை இடிப்பதற்கு ஏதுவாக கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கிடையே மாநகராட்சியினரின் பணியின் குறுக்கீடு செய்யும் முயற்சியில் கட்டிட உரிமையாளர் ஈடுபட்டார்.

இருப்பினும் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் கட்டிடத்தை இடிக்கும் பணியில் பெரிய விதத்தில் எந்த தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். இதன்மூலம் 12 மணி நேரத்திற்குள் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்தும் இந்த சட்டவிரோத கட்டிடத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இருப்பினும் அந்த கட்டிடம் அவர்களின் எல்லைக்குள் வராது என மாநகராட்சியினர் தெரிவித்தனர். 

Next Story