சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம்


சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:00 AM IST (Updated: 13 Aug 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கழுதைப்புலி, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் புதுவடவள்ளியில் இருந்து இருமாநில எல்லையான காரப்பள்ளம் வரை சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அவ்வப்போது, குடிநீர் மற்றும் தீவனத்தை தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம்.

தற்போது மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், ஆசனூர் வனப்பகுதியில் காரப்பள்ளம் முதல் புளிஞ்சூர் வரை சாலையோரத்தில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் புற்களை திண்பதற்கு மான்கள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த மான்களை வேட்டையாடுவதற்காக புலி ஒன்று வந்து உள்ளது.

இந்த புலியை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், வாகனத்தை நிறுத்திவிட்டு தங்களுடைய செல்போனில் புலியை படம் பிடித்து உள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் கூறுகையில், ஆசனூர் வனப்பகுதி தற்போது பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மான்கள் ரோட்டை அடிக்கடி கடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் வன்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டும்.

தற்போது மான்களை வேட்டையாடுவதற்காக ஆசனூர் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகஅளவில் உள்ளது. எனவே கார், மோட்டார் சைக்கிள்களை செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி செல்போன்களில் படம் பிடிக்க வேண்டாம். குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் வனப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.


Next Story