மகனும், மருமகளும் ஏமாற்றியதால் விரக்தி: வயதான தம்பதியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி


மகனும், மருமகளும் ஏமாற்றியதால் விரக்தி: வயதான தம்பதியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 14 Aug 2018 12:15 AM GMT (Updated: 13 Aug 2018 6:54 PM GMT)

மகனும், மருமகளும் ஏமாற்றியதால் விரக்தியடைந்த வயதான தம்பதியினர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மனைவி முத்துலட்சுமி(68). இவர்கள் ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி அருகே இடம் வாங்கி வீடு கட்டியுள்ளனர். இந்த வீட்டிற்காக ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தனராம். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில் சண்முகத்தின் மகன் முனீசுவரன் மற்றும் மருமகள் சுகுமாரி ஆகியோர் கடன் தொகையை தாங்களே செலுத்தி விடுவதாகவும், அந்த வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டுள்ளனர். இதை நம்பிய சண்முகம் தனது மகன் முனீசுவரன் பெயரில் அந்த வீட்டை எழுதிக் கொடுத்துள்ளார்.

வீட்டை எழுதி வாங்கிய முனீசுவரனும், அவரது மனைவி சுகுமாரியும் கடன் தொகை ரூ.20 லட்சத்தை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகமும், முத்துலட்சுமியும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சண்முகமும், அவரது மனைவியும் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அருகில் நின்ற போலீசார் ஓடிச்சென்று உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட் டார். கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டியும், அவரது கணவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story