கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை வங்கி கணக்கில் விரைந்து செலுத்த வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகையை விரைந்து வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கரும்புக்கான இடைக்கால ஊக்கத்தொகை உரிய விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும். அதற்காக பயனாளிகளின் பட்டியலை விரைவாக தயார் செய்ய வேண்டும். விவசாயிகளின் சாகுபடி செய்துள்ள நிலத்தின் அளவு, கரும்பு வழங்கிய விவரம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
விவசாயிகளின் வங்கி கணக்குகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். வேளாண்மை உதவி இயக்குனர், அலுவல்சாரா கரும்பு ஆய்வாளர்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் விவசாயிகளின் பட்டியலை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இடைக்கால ஊக்கத்தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் அலுவலர்கள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர்கள் அனுசுயாதேவி, சிவமலர், இம்மானுவேல்ராஜ், லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் சசிக்குமார், விழுப்புரம் வேளாண் துணை இயக்குனர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி, வேளாண் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story