வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர்


வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:15 AM IST (Updated: 14 Aug 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது என்று கலெக்டர் தண்டபாணி தெரிவித்தார்.

கடலூர், 


கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.70 அடியாக உள்ளது. (மொத்த கொள்ளளவு 47.50) ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 920 கன அடி வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி முழுமையாக நிரம்பியதால் சேத்தியாத்தோப்பு வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடியும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
வடவாறு மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகளுடன் கலந்து பேசி பாசனத்துக்கு தேவைப்படும் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட முடிவுசெய்துள்ளோம்.

கீழணையில் 8.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இன்று(அதாவது நேற்று)9 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது.

எதிர்காலத்தில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக கூடுதல் வாய்க்கால் அமைப்பது பற்றி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் வடவாறு வழியாக 22 கிலோ மீட்டர் தூரமும், வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக 45 கிலோ மீட்டர் தூரமும் கடந்து ஏரிக்கு தண்ணீர் வருகிறது.

வீராணம், பெருமாள் மற்றும் வாலாஜா ஆகிய 3 ஏரிகளையும் ஆழப்படுத்தினால் கூடுதலாக 3 முதல் 4 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமித்து வைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் 770 நீர் நிலைகளில் 15 லட்சம் கன மீட்டர் அளவில் வண்டல் மண் அள்ளப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 400 நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் 370 நீர் நிலைகளில் குறைந்த அளவில் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.11½ கோடி செலவில் சிதம்பரம் வடிநில கோட்டத்தில் 35 பணிகளும், விருத்தாசலம் வடிநில கோட்டத்தில் 20 பணிகள் என மொத்தம் 55 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதிதாக ஷட்டர் அமைத்தல், மதகுகள் பழுது பார்த்தல், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடையும்.
கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் ரூ.1 கோடியே 48 லட்சம் செலவில் 19 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்குள் முடிவடையும்.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.140 கோடியில் நிரந்தரவெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒருவார காலமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆட்டோவில் ஒலி பெருக்கி அமைத்து அதன் மூலமாகவும், தண்டோரா அடித்தும், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story