வேலையை புறக்கணித்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்


வேலையை புறக்கணித்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:00 AM IST (Updated: 14 Aug 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் வேலைபார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி, 


நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி, நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு அருகே நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் என்.எல்.சி.யில் இருந்து ஒப்பந்தம் பெற்று, அந்த கட்டிட பணியை செய்து வருகிறது. இதில் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 60-க்கும் மேற்பட்டோர் பிரிவு ஒப்பந்ததாரர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த தனியார் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகையினை வழங்காமல் உள்ளது.

இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.

இந்த நிலையில் ஊதியம் தரவில்லையெனில் வேலைக்கு செல்ல மாட்டோம் எனக்கூறி, ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஒப்பந்ததாரர்களும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் ரகுராமன், சுப்பிரமணி, கோதண்டபாணி, தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரருடைய திட்ட இயக்குனர் கண்ணன் ராமச்சந்திரன், கட்டுமான பணி பொறுப்பாளர் திருப்பாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அந்த தனியார் நிறுவனம் ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என வருகிற 23-ந்தேதிக்குள் கணக்கிட்டு, என்.எல்.சி. நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். என்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிறுவன தலைவர் (பொறுப்பு) ஆகியோர் கொண்ட குழு அமைத்து 45 நாட்களுக்குள் ஒப்பந்ததாரர்களுக்குரிய நிலுவை தொகையை முழுமையாக வழங்கிட ஆவன செய்வதாக என்.எல்.சி. அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதையேற்ற ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவதற்கு ஒப்புக் கொண்டனர்.

ஆனால் சில தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை முடியும் முன்னரே வீட்டிற்கு சென்றதால், அங்கிருந்த ஒப்பந்த தொழிலாளர்களும் நேற்று பணிக்கு செல்லவில்லை. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story