சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு: காரில் வரும் முக்கிய பிரமுகர்களுக்கு அடையாள அட்டை


சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு: காரில் வரும்  முக்கிய பிரமுகர்களுக்கு அடையாள அட்டை
x
தினத்தந்தி 14 Aug 2018 5:30 AM IST (Updated: 14 Aug 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா சிறப்புரையாற்றுகிறார்.

சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் புகுந்து அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என்றும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் சுதந்திர தின விழா நடைபெறும் போது, கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. விழாவுக்கு காரில் வரும் முக்கிய பிரமுகர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டு உள்ளது. 

போக்குவரத்து மாற்றம்

இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு, 15–ந்தேதி காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது. 

* உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

* காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

ராஜாஜி சாலை வழியாக...

* பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

* அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

அடையாள அட்டை

* சிவப்பு மற்றும் ‘பர்பிள்’ (ஊதா) வண்ண வாகன அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று, தலைமை செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணிக்குபின் கொடிமரச்சாலை, ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.

* நீல மற்றும் ‘பிங்க்’ (இளம் சிவப்பு) வண்ண வாகன அட்டை வைத்திருப்போர் கொடிமரச்சாலை, ஜார்ஜ் கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ சென்று தலைமை செயலக வெளிவாயிலில் அருகே இறங்கிக்கொண்டு, வாகனங்களை தலைமை செயலகத்துக்கு எதிரேயுள்ள பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

மாநகர பஸ்கள்

* அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.

* கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் மாநகர பஸ்கள் மாணவர்களை போர் நினைவுச்சின்னம் அருகே இறக்கிவிட்டபின், போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story