குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வாங்கிய வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வாங்கிய வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தேனி,
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வாங்கிய வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் அரண்மனைப்புதூரை சேர்ந்த பெண்கள் சிலர், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘அரண்மனைப்புதூர் வசந்த் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேவாரம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேவாரம் பேரூராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு குடிசைகளை மாற்றி கட்டிடமாக கட்டுவதற்கு நீண்டகால கடனாக அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை வங்கியில் கடனாக பெற்றோம். இந்த நிதியில் குடிசைகளை மாற்றி வீடு கட்டியுள்ளோம். இந்த கடனுக்கு வட்டி எதுவுமில்லை என்று கூறி எங்களை கடன் வாங்க வைத்தனர். தற்போது வட்டியுடன் கடனை கட்டவில்லை என்றால் வீட்டை பறிமுதல் செய்து விடுவோம் என்று வங்கி நிர்வாகம் மிரட்டுகிறது.
கடன்பெற்ற அனைவரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். எங்களால் இந்த கடன் தொகையை செலுத்த இயலவில்லை. மேலும், தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு பசுமை வீடு திட்டம் என்ற பெயரில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அதே தகுதியுடைய நாங்கள் அடிப்படை தேவையான குடியிருப்பை இழந்து தெருவில் நிற்கும் நிலையில் இருக்கிறோம். எனவே, நாங்கள் வாங்கிய கடனை பசுமை வீடுகள் திட்டத்துக்கு மாற்றி எங்களது கடன் தொகையை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி, ஆவாரம்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேக்கிழார்பட்டியில் கடந்த 2002-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இந்த இடம் அளவீடு செய்யப்படாமல் இருந்தது. மக்களின் கோரிக்கையை தொடர்ந்து தற்போது நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. இந்த நிலத்துக்கு செல்லும் பாதையில் உள்ள பாறையை அகற்றினால் மட்டுமே பயனாளிகள் தங்களின் நிலத்துக்கு சென்று வர முடியும். எனவே, இந்த பாறையை அகற்றி பாதை அமைத்துக் கொடுத்து, வீட்டுமனையை அதற்கு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story