புதுக்கோட்டையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு


புதுக்கோட்டையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த கருணாநிதிக்கு புதுக்கோட்டையில் முழுஉருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை நினைவுகூறும் வகையில் புதுக்கோட்டை நகரில் உள்ள பி.எல்.ஏ.ரவுண்டானா அல்லது அரசு மகளிர் கலைக்கல்லூரி ரவுண்டானாவில், கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை நிறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும், என கூறியிருந்தனர்.

ஆலங்குடி தாலுகா பாலக்குடிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் கொடுத்த மனுவில், மணியம்பலம் தெற்கு வெள்ளாற்று பகுதியில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மணல் அள்ளி, கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், கமல்சுதாகர் கொடுத்த மனுவில், கிராம சபைக்கூட்டத்தில் இதுவரை நடந்த வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களையும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கிராம சபைக்கூட்டத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கூட்டத்தில் மக்கள் வைக்கும் அனைத்து தீர்மானங்களையும் பதிவு செய்ய வேண்டும். தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். தீர்மான நகல் கேட்பவர்களுக்கு தாமதமின்றி தீர்மான நகல் வழங்க வேண்டும், என கூறியிருந்தார்.

மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் சித்தனேந்தல் பகுதியை சேர்ந்த அருளாந்து என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள வரத்துவாரியை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளனர். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி, வரத்து வாரியை ஆக்கிரமித்து சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல சித்தனேந்தல் பகுதியை சேர்ந்த முத்து என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் சுனையக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் கொடுத்த மனுவில், சுனையக்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்தால், எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உரிய விலையில் மதுபானங்கள் கிடைக்கும். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

திருவரங்குளம் தேத்தான்பட்டியை சேர்ந்த ஊர்பொதுமக்கள் சார்பில் கருப்பையா என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்ல முறையாக சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். திருவரங்குளம் அருகே வடவாகுளம் பாசன கண்மாய் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பி விட்டால், நாங்கள் திருவரங்குளம் செல்வதற்கு சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. ஆனால் தேத்தான்பட்டியில் இருந்து வடவாகுளம் வழியாக திருவரங்குளம் செல்ல 600 மீட்டர் இடைவெளி தான் உள்ளது. எனவே இந்த சாலையை இணைத்து கொடுத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேத்தான்பட்டியில் இருந்து திருவரங்குளத்திற்கு இணைப்பு சாலை அமைத்துத்தர வேண்டும் என கூறியிருந்தனர். 

Next Story