கருணாநிதி சமாதியில் ரூ.4 லட்சத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை


கருணாநிதி சமாதியில் ரூ.4 லட்சத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை
x
தினத்தந்தி 13 Aug 2018 9:21 PM GMT (Updated: 13 Aug 2018 9:21 PM GMT)

கருணாநிதி சமாதியில் ரூ.4 லட்சத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் சென்னை மெரினா கடற்கரையோரம் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அங்கு 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சமாதி மட்டும் 680 சதுர அடியில் உள்ளது.

ஒரு அடி உயரத்தில் சமாதி தற்போது கட்டப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து கருணாநிதி சமாதியை சுற்றி துருப்பிடிக்காத இரும்பினால் வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், சமாதியை சுற்றிலும் சிமெண்டு கற்களும் பதிக்கப்பட்டு வருகின்றன.

நிழற்குடை

இந்நிலையில் கருணாநிதி சமாதியில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் ரூ.4 லட்சம் செலவில் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு அதில் இந்த நிழற்குடை அமைகிறது. புதுச்சேரியில் நிழற்குடை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

38 அடி உயரம், 33 அடி அகலத்தில் இந்த நிழற்குடை கருணாநிதி சமாதியில் தற்காலிகமாக நிறுவப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கும் இதுபோல் தான் நிழற்குடை தற்காலிகமாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடைபாதை

மேலும், கருணாநிதி சமாதிக்கு பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக தனித்தனி நடைபாதை தலா 5 அடி அகலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நடைபாதையில் சிமெண்டு கற்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கான செலவுகளை தி.மு.க. தரப்பினர் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story