சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல்


சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நேற்று கொல்கத்தாவில் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 10 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி. கட்சி எல்லைகளை தாண்டி அனைத்து தலைவர்களும் அவருக்கு மரியாதை கொடுத்தனர். அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி மரணம் அடைந்து இருப்பது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தபோது அவர் சிறப்பான முறையில் பணியாற்றினார். 1996-ம் ஆண்டு அவருக்கு சிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கப்பட்டது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை அவருடைய குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு எனக்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது. அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 10 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார். கம்யூனிஸ்டு கொள்கையில் உறுதியாக இருந்த அவர், நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தபோது சிறப்பான முறையில் செயலாற்றினார். அவரது மரணம் மூலம் கம்யூனிஸ்டு தூண்களில் ஒன்று சரிந்துவிட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது“ என்றார்.

அதே போல் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் கிருஷ்ண பைரே கவுடா, ஜி.டி.தேவேகவுடா உள்பட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story