சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழா நாளை(புதன்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருத்தாசலம்,
சுதந்திர தின விழா நாளை(புதன்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடல் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையம், கோவில், ரெயில் நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்த பிறகே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர். மேலும் நடைமேடைகளில் சந்தேகத்துக்கிடமாக யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? கேட்பாரற்று பைகள், சூட்கேஸ் போன்ற பொருட்கள் எதுவும் கிடக்கிறதா? என அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மணிமுக்தாறு பாலத்தின் கீழ் பகுதி, மேல்பகுதி, தண்டவாளங்கள் ஆகிய பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையிட்டனர். இதேபோல் மாரி ஓடை பாலம், ஆறுகம்மா ஓடை பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களிலும், பூவனூர் ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் சம்பத், தலைமை காவலர் பாஸ்கர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கடல் வழியாக பயங்கவரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலூர் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், ரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் நவீன ரோந்து படகில் நல்லவாடு முதல் கிள்ளை வரை கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த படகுகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும் சந்தேகப்படும்படியாக யாரேனும் வந்தால் 1093 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story