டெல்லியில் துணை ஜனாதிபதி-அதிகாரிகளுடன் சந்திப்பு:சிறப்பு பள்ளி மாணவர்கள் நெல்லை திரும்பினர்


டெல்லியில் துணை ஜனாதிபதி-அதிகாரிகளுடன் சந்திப்பு:சிறப்பு பள்ளி மாணவர்கள் நெல்லை திரும்பினர்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:18 AM IST (Updated: 14 Aug 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் துணை ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடிய சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று நெல்லைக்கு திரும்பினர். அவர்கள், “கல்வியால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு வர முடியும்” என்பதை உணர்ந்து கொண்டதாக கூறினர்.

நெல்லை, 



தேசிய குழந்தைகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் சிறப்பு பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிக்கூடத்தில் சாலையோர குழந்தைகள், நரிக்குறவர் குழந்தைகள் உள்பட சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் 32 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, கல்வியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை சந்தித்து ஒரு நாள் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த 32 மாணவர்களும் விஜிலா சத்யானந்த் எம்.பி.யின் ஏற்பாட்டில் டெல்லிக்கு ரெயில் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து செல்லப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் ஒரு நாள் முழுவதும் இருந்தனர். அவர்கள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அதிகாரிகளை சந்தித்து உரையாடினர். மேலும் அங்குள்ள அரசு அதிகாரிகளின் அலுவலகங்களை பார்வையிட்டனர். பின்னர் ஆக்ராவில் தாஜ்மகால், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப் பார்த்தனர். அவர்கள் தங்களது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டனர். நேற்று காலை அவர்கள் நெல்லை வந்தடைந்தனர்.

அப்போது மாணவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், “எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினோம். கல்வியால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை உணர்ந்து கொண்டோம். நாங்களும் நல்ல முறையில் படித்து உயர்பதவிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றனர். 

Next Story