யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க மின்கம்பி வேலி அமைக்கப்படும் மாவட்ட வன அலுவலர் தகவல்


யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க மின்கம்பி வேலி அமைக்கப்படும் மாவட்ட வன அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க மின்கம்பி வேலி அமைக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதி வழியாக கர்நாடகாவில் இருந்து ஆண்டுதோறும் காட்டு யானைகள் வருகின்றன. இவைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது. அவற்றை தடுக்க மின்கம்பி வேலி அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கையால் யானை தாக்கி பலி அல்லது காயம் அடைவோர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 2013-2014-ம் ஆண்டில் இருந்து 2018-2019 வரை 38 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. யானை தாக்கி காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர் சேதம் தொடர்பாக 3,498 மனுக்கள் பெறப்பட்டு அதில் 3,096 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க யானை தடுப்பு பள்ளம் அமைத்துள்ளோம். தடுப்பு பள்ளம் அமைக்க முடியாத பகுதியில் கிரானைட் குவாரிகளில் இருந்து பெறப்படும் பெரிய கற்களை கொண்டு சுவர்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் எல்லாம் மேற்கொண்டுள்ள நிலையில் ஒரு சில காரணத்தால் யானைகள் ஊருக்குள் வருகிறது. குறிப்பாக கிராம மக்கள் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதி உள்ளே செல்வதற்கு வசதியாக யானை தடுப்பு பள்ளங்களை சேதப்படுத்துகின்றனர்.

இதனால் அந்த பகுதி வழியாக யானைகள் ஊருக்குள் வருவது தவிர்க்க முடியாமல் போகிறது.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். யானைகள் ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் வராமல் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை தமிழக அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பி உள்ளது.

அதன்படி வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் மின்கம்பி வேலிகள் அமைக்கப்படும். ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு கம்பி வேலி அமைக்க உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த மின்கம்பி வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story