பேராசிரியர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகில், பேராசிரியர் மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்தவர் தொ.பரமசிவன். இவர் தமிழ் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல்வேறு நூல்களை எழுதிய மூத்த தமிழ் அறிஞரும் ஆவார். தொ.பரமசிவனின் மனைவி இசக்கியம்மாள். நேற்று அதிகாலை இசக்கியம்மாள் வீட்டின் முன்பு தண்ணீர் தெளிப்பதற்காக அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்கி, இசக்கியம்மாள் அருகில் வந்தார். அவர் திடீரென்று இசக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு பின்பகுதி ஆகும். போலீஸ் நிலையம் அருகிலேயே மர்ம நபர்கள் துணிகரமாக கைவரிசை காட்டி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story