சுதேசி மில் வளாகத்தில் செயல்படும் வங்கிக் கிளையை மூட வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு


சுதேசி மில் வளாகத்தில் செயல்படும்  வங்கிக் கிளையை மூட வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Aug 2018 5:03 AM IST (Updated: 14 Aug 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

சுதேசி மில் வளாகத்தில் செயல்படும் வங்கி கிளையை மூடி மற்றொரு கிளையுடன் இணைக்க வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை சுதேசி மில் வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் முதியோர் பென்‌ஷன் பெறுபவர்கள் ஆவர்.

இந்த வங்கிக்கிளை அடுத்த மாதம் 10–ந்தேதியோடு மூடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் புஸ்சி வீதியில் உள்ள வங்கிக்கிளையில் இணைக்கப்படுவார்கள் என்றும் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு வங்கியில் வைக்கப்பட்டது.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். வங்கிக் கிளையை மூடுவதற்கும், மற்றொரு கிளையுடன் இணைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவா எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்து சமாதானப்படுத்தினார்.

இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டார். பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வங்கிக்கிளையை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி வங்கியின் உயர் அதிகாரிகளை போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது வாடிக்கையாளர் நலனை கருத்தில்கொண்டு வங்கி இணைப்பினை தவிர்க்குமாறும், இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் உறுதியளித்தார். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக அதிகாரிகளும் உறுதியளித்தனர்.


Next Story