தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது வரவேற்கத்தக்கது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது வரவேற்கத்தக்கது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த பாத்திமாபாபு கூறினார்.
தூத்துக்குடி,
இது குறித்து அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் இயற்கை வளத்தை காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொரு உணர்வாளருக்கும் நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்த உத்தரவை வரவேற்கிறோம்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வாழ்வாதார உரிமையை கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல் சாசன தத்துவப்படி வாழ்வுரிமைக்காக 99 நாட்கள் அறவழி போராட்டம் நடந்தது. 100-வது நாள் போராட்டத்தில் திடீரென வன்முறை நடக்கிறது. இந்த வன்முறைக்கு திட்டமிட்டது யார்?.
மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். ஆகையால் ஆலை தரப்பில் 144 தடை உத்தரவு கோர வேண்டியதன் அவசியம் என்ன?. ஏதேனும் கலவரம் நடக்கும் என்று திட்டமிட்டவர்களுக்குத்தான் தெரியும். ஆகையால் ஆலையின் கைக்கூலிகள்தான் வன்முறையில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு சில அதிகாரிகள், போலீசார் துணையாக இருந்து இருக்கிறார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?, அதனை அமல்படுத்தியது யார்?. போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அப்படிப்பட்ட நேரத்தில் போலீஸ் துறையை சேர்ந்த ஒரு முகமையே விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற வேண்டும் என்று கோர்ட்டு கூறி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் வருவார்களா? என்பது சந்தேகம்தான். நல்ல, நம்பிக்கையான அதிகாரியை நியமித்து மனுக்களை பெற வேண்டும். சி.பி.ஐ. விசாரணையை நம்புகிறோம். அது நேர்மையாக நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அர்ச்சுனன் கூறும் போது, “கடந்த மே மாதம் 22, 23-ந் தேதிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி மனு தாக்கல் செய்து இருந்தோம். வேறு சிலரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர். அதனை தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இந்த விசாரணையை 4 மாதத்துக்குள் சி.பி.ஐ. முடித்து அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இனிமேலும் தூத்துக்குடியில் போலீசார் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்துவதும், கைது செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவின் பேரில் அரசு மேல்முறையீட்டுக்கு செல்லக்கூடாது“ என்று கூறினார்.
Related Tags :
Next Story