சமூக வலைத்தளங்களில் அம்பேத்கர் பாடலை அவதூறுசெய்து வெளியிட்ட மாணவன் உள்பட 2 பேர் கைது


சமூக வலைத்தளங்களில் அம்பேத்கர் பாடலை அவதூறுசெய்து வெளியிட்ட மாணவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2018 4:45 AM IST (Updated: 15 Aug 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் பாடலை அவதூறுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமம் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 25) கட்டிட தொழிலாளி. இவரும் இவருடைய உறவினரான 9-ம் வகுப்பு மாணவர் ஒருவரும் சேர்ந்து கடந்த 12-ந் தேதி அம்பேத்கர் பாடலை அவதூறாக ‘டப்ஸ்மாஷ்’ செய்து நடனமாடி வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இது பேரணாம்பட்டு பகுதியில் வைரலாகபரவியது. இந்த வீடியோவை பார்த்த பக்கத்து கிராமங்களான கள்ளிச்சேரி, கோட்டைச்சேரி பகுதிகளை சேர்ந்த ஒருபிரிவினர் சென்று சுப்பிரமணி மற்றும் மாணவனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீசார் விரைந்துசென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மற்றும் மாணவனை கைதுசெய்தனர்.

அவர்களில் சுப்பிரமணி குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டார். மாணவருக்கு 14 வயதே ஆவதால் அவர் வேலூரில் உள்ள இளம்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.


Next Story