சுதந்திர தின விழா: கலெக்டர் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றுகிறார்.
நெல்லை,
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.
இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினரை கவுரவிக்கிறார். அரசு துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்குகிறார். சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சுதந்திர தினத்தையொட்டி அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொடியேற்றும் பகுதி மற்றும் மைதானத்தின் உள்பகுதி, மைதானத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.
மேலும் மைதானத்தை சுற்றி உள்ள உயரமான கட்டிடங்களின் மீது போலீசார் நின்று தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர மைதானத்துக்குள் நுழையும் பார்வையாளர்களை சோதனை செய்யவும், அவர் கள் வெடி பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளார்களா? என்பதை கண்டுபிடிக்கவும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாசலும் அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், கோவில்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லை வழியாக இயக்கப்பட்ட ரெயில்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை நடத்திய பிறகே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதே போல் நெல்லை குறுக்குத்துறை ரெயில்வே ஆற்றுப்பாலம் மற்றும் ரெயில் தண்டவாளங்களிலும் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story