ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:30 AM IST (Updated: 15 Aug 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு கடந்த சில நாட்களாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

ஒகேனக்கல் மற்றும் நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 92 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 120.30 அடியாக இருந்தது.

நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 89 ஆயிரத்து 15 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 88 ஆயிரத்து 518 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 120.31 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் மேட்டூர் அனல்மின் நிலைய பாலம், 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம், அணையின் இடதுகரை, வலது கரை ஆகிய பகுதிகளில் தண்ணீர் பாய்ந்தோடுவதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். 

Next Story