ஆண்டிப்பட்டி அருகே ரூ.7 கோடியில் மாவட்ட சிறைச்சாலை
ஆண்டிப்பட்டி அருகே ரூ.7 கோடியே 10 லட்சம் மதிப்பில் மாவட்ட சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் நிலையங்கள் என மொத்தம் 33 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்படுகிற குற்றவாளிகள் உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகின்றனர்.
அங்கு போதுமான இடவசதி இல்லாததால், மதுரை மத்திய சிறை மற்றும் உசிலம்பட்டி சிறையில் கைதிகளை அடைக்கும் நிலை உள்ளது. இதனால் போலீசாருக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு தேனி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட சிறைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.7 கோடியே 10 லட்சம் மதிப்பில் சிறைச்சாலை கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறைச்சாலையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைச்சாலையில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறைச்சாலையில் ஒரே நேரத்தில் 150 கைதிகளை அடைத்து வைக்க முடியும். மேலும் இந்த சிறைச்சாலை வளாகத்தில் வீடியோ கான்பரன்ஸ் அறை, நவீன சமையல் அறை, முழுப்பாதுகாப்புடன் கூடிய கைதிகள்-உறவினர்கள் உரையாடும் அறை ஆகியவை உள்ளன.
இதுமட்டுமின்றி சிறை வளாகத்தில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறைச்சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வீண் அலைச்சல், காலவிரயம் குறையும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story