வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: உறை கிணற்றுக்குள் மின்மோட்டார் மூழ்கியது
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், குன்னூர் கிராமத்தின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டு இருந்த உறை கிணற்றுக்குள் மின்மோட்டார் மூழ்கியது. இதனால், அந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. மூல வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வராத போதிலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இங்கு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இப்பகுதியில் குன்னூர் ஊராட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றை மூழ்கடித்து சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் ஓடியது. அப்போது அந்த உறை கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த மின்மோட்டார், கிணற்றுக்குள் விழுந்தது. உறைகிணற்றின் அடிப்பகுதிக்குள் மோட்டார் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குன்னூர் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.
ஆற்றில் தண்ணீர் வரத்து குறையும் முன்பு மோட்டாரை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்த உறை கிணற்றுக்கு அருகில் வள்ளல்நதி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மற்றொரு உறை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்காக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று, வள்ளல்நதி திட்டத்துக்கான உறைகிணற்றில் கூடுதல் மோட்டார் பொருத்தி குன்னூருக்கு தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த உறைகிணறு குடிநீர் வடிகால் வாரியத்தால் அமைக்கப்பட்டதாகும். இதனால், அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் அந்த உறைகிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து குன்னூர் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குன்னூர் பகுதிக்கான உறைகிணற்றில் நிலைமை சீராகும் வரை வள்ளல்நதி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான உறைகிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த உறைகிணற்றில் மோட்டார் பொருத்தப்பட்டு, குழாய்கள் இணைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story