கரையையொட்டிய கிராமங்களில் புகுந்த கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது


கரையையொட்டிய கிராமங்களில் புகுந்த கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது
x
தினத்தந்தி 15 Aug 2018 4:30 AM IST (Updated: 15 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

கரையையொட்டிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.

கொள்ளிடம்,

கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கரைபுரண்டு ஓடிய தண்ணீர் ஆற்றங்கரை தெருவுக்குள் புகுந்து 32 வீடுகளையும், கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் 10 வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. இதேபோல் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை என்னுமிடத்தில் ஷட்டர் மதகு நன்கு மூடப்பட்டிருந்ததால், கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வெளியேறி பூசை நகர் மற்றும் போலீஸ் காலனி பின்புறம் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.

இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேற்று கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள நாதல்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் நாகை மாவட்டத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து மேடான பகுதிகளுக்கு செல்ல ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அடங்கிய குழுவின் நிலைமையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ரோந்து பணியை பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அலுவலகங்களில் வி.எச்.எப். வசதியுடன் தகவல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க தொடங்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள ஆறுகளில் செல்லும் தண்ணீரின் அளவை கண்காணிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் அதிகமாக வெளியேறும்போது உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 16 ஆயிரத்து 950 மணல் மூட்டைகள், 63 ஆயிரம் பாலித்தீன் பைகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 65 யூனிட் மணல் மற்றும் 2 ஆயிரத்து 530 சவுக்கு கட்டைகள், 2,860 சவுக்கு குச்சிகள் தயார் நிலையில் உள்ளன.

கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக பத்திரிகை மூலமாகவும், ஆட்டோ மூலமாகவும், தண்டோரா மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, சீர்காழி தாசில்தார் சங்கர், மயிலாடுதுறை காவிரி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி பொறியாளர் விவேகானந்தன், கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் சென்றனர். 

Next Story