நீர்வரத்து அதிகரிப்பால் ஆழியாறு அணையில் 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு


நீர்வரத்து அதிகரிப்பால் ஆழியாறு அணையில் 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:15 AM IST (Updated: 15 Aug 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து அதிகரிப்பால் ஆழியாறு அணையின் 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

கோட்டூர்,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நீர்இருப்பு குறைந்து குட்டை போல் காட்சி அளித்த ஆழியாறு அணை தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் 21–ந்தேதி அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு நீர்வரத்தை பொறுத்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நேற்று காலையில் வினாடிக்கு 2 ஆயிரத்து 637 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 2 ஆயிரத்து 394 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதற்கிடையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மதியம் 3 மணிக்கு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கோபாலபுரம்–மீனாட்சிபுரம் இடையேயான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்த பிறகே மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது குறைக்கப்படும் என்றும், நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story