மக்களாட்சி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்திகளிடமிருந்து நாட்டை காக்க நாம் அனைவரும் உறுதியேற்கவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்


மக்களாட்சி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்திகளிடமிருந்து நாட்டை காக்க நாம் அனைவரும் உறுதியேற்கவேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Aug 2018 5:45 AM IST (Updated: 15 Aug 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

மக்களாட்சி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்திகளிடமிருந்து நாட்டை காக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று சுதந்திர தின செய்தியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

சுதந்திர தினத்தையொட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

நமது தாய் திருநாட்டின் சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடி கொண்டிருக்கும் இந்த இனிய நாளில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திர இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைத்து போற்றுவது நம் அனைவரது கடமையாகும். அவர்களின் மூச்சுக்காற்றில்தான் நமது தேசத்தின் மூவர்ணக்கொடி பாங்குடன் பறந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

இத்தருணத்தில் நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை போராட்ட வீரர்கள் அனைவருக்கும் எனது வீர வணக்கங்களை பெருமையுடன் உரித்தாக்குகிறேன். எங்கள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தடைகளை நீக்கி வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. மாநிலத்தின் வருவாய், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தனிநபர் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.

2017–18 ஆம் ஆண்டில் மத்திய அரசின் அகில இந்திய வளர்ச்சி 7 சதவீதம் மட்டுமே இருந்த நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 11.4 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த நிதியாண்டின் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தைவிட 65 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு புதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது.

பிற மாநிலங்களை காட்டிலும் கல்வியிலும், சுகாதார சேவையிலும் தொடர்ந்து நாம் முன்னிலை வகித்து வருகிறோம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பேணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எங்கள் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் யாவும் வெற்றிபெற மக்கள் அளித்து வரும் ஒத்துழைப்பும் பேராதரவுமே காரணமாகும். மக்களும் அரசும் கைகோர்க்கும்போது எந்தவொரு திட்டத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்பதற்கு எங்கள் அரசுக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவே சான்றாகும். இந்த ஒத்துழைப்பும் பேராதரவும் வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பும், நமது மக்களாட்சி ஜனநாயகமும், நமது நாட்டின் தனித்த அடையாளங்களாகும். இதனை சீர்குலைக்க முயலும் சக்திகளிடமிருந்து நாட்டை காக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டு அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

எண்ணற்ற தலைவர்களின் தன்னலமற்ற உழைப்பாலும், உயிர் தியாகத்தாலும், நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது இந்தியர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமை. தற்போது நமது தேசத்தலைவர்களிடம் இருந்த எளிமை, பொறுமை, சகோதர மனப்பான்மை, தாய் நாட்டுப்பற்று, நமது தேசத்தை வல்லரசாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகிய அனைத்தும் மக்களிடம் மறைந்து வருகிறது. சுயநலமே அதிகரித்து வருகிறது. இது மீண்டும் நாட்டை அடிமை தனத்துக்கு அழைத்து செல்லும்.

எனவே வருங்கால சந்ததிகளான மாணவர்கள், இளைஞர்கள் மனதில் தன்னலம் கருதாமல் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை கொண்டு செல்ல இந்நாளில் சபதம் ஏற்போம்.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில், நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடனும், அனைத்துதரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து நமது நாட்டின் வளர்ச்சியில் பங்குகொள்வோம். இந்த சுதந்திர தின நன்னாளில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை வணங்கி அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், ராதாகிருஷ்ணன் எம்.பி., அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் சுதந்திரதின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story