சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பைகளால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 3 பைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்குள்ள உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் 2-வது நுழைவுவாயில் அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் 3 பைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த மத்திய தொழிற்படை போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து பைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பைகளில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது. அதில் பழைய துணிகள் இருந்தன. அப்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த முஜிபூர் (வயது 27), அஸ்ரப் (24), இஸ்ரப் (24) ஆகியோர் ஓடி வந்து அந்த பைகள் தங்களுடையது என்றும், சென்னையில் கட்டிட வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக கொல்கத்தா விமானத்தில் ஏற வந்ததாகவும், பைகளை வைத்து விட்டு டீ குடிக்க சென்றதாகவும் தெரிவித்தனர்.
விமான டிக்கெட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ததில் வாலிபர்கள் கூறியது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் விமானநிலைய அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story