சிறுத்தைப்புலியை விறகு கட்டையால் அடித்து விரட்டி மகளை காப்பாற்றிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது
சிறுத்தைப்புலியை விறகு கட்டையால் அடித்து விரட்டி மகளை காப்பாற்றிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை சென்னையில் இன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்–அமைச்சர் வழங்குகிறார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் வால்பாறை டேன் டீ நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய கல்லார் எஸ்டேட் 4–வது பிரிவு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் அய்யப்பராஜ். இவரது மனைவி முத்துமாரி (வயது 46). இவர்களுக்கு மணிகண்டன் (15) என்கிற மகனும், சத்யா (11) மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 25–ந்தேதி மாலை 6.30 மணிக்கு சத்யா தனது தாய் முத்துமாரியுடன், வீட்டின் பின்புறத்தில் விறகு கட்டைகளை எடுத்து அடுக்கி கொண்டிருந்தார். அப்போது குனிந்து விறகை எடுத்த போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி திடீரென்று பாய்ந்து வந்து சத்யாவின் கழுத்து பகுதியை கடித்து குதறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் முத்துமாரி ஆவேசமடைந்து விறகு கட்டையை எடுத்து சிறுத்தைப்புலியின் தலையில் ஓங்கி அடித்து விரட்டினார். சத்தியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி சிறுத்தைப்புலியை விறகு கட்டையால் அடித்து விரட்டிய முத்துமாரி கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு தேர்வு பெற்றார். இன்று அவருக்கு சென்னையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவிக்கிறார். இதற்காக முத்துமாரியை நேற்று வருவாய் துறையினர் தனியார் பஸ்சில் பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர். முன்னதாக விருது பெறுவது குறித்து முத்துமாரி கூறுகையில், எனது உயிர் போனாலும், எனது மகளின் உயிரை காப்பாற்றும் நோக்கில்தான் நான் சிறுத்தைப்புலியை கட்டையால் அடித்து விரட்டினேன். நல்லவேளையாக சிறுத்தைப்புலி பயந்து ஓடிவிட்டது. எனது மகளும் உயிர் பிழைத்துக்கொண்டாள். இதற்கிடையில் எனக்கு தமிழக அரசு சார்பில் கல்பனா சாவ்லா விருது அளிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களை பொறுத்தவரை மனதில் தைரியம் இருந்தால் எந்த காரியத்தை எளிதில் எதிர்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.