சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதால் பரவனாற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தம்


சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதால் பரவனாற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Aug 2018 5:45 AM IST (Updated: 15 Aug 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால், கடலூர் மாவட்டம் பரவனாற்றில் ஆழ்குழாய்கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சென்னை, 

கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. பாசனம் மற்றும் குடிநீருக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் திருச்சி முக்கொம்பு அணை, தஞ்சாவூர் கல்லணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில் சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து முதலில் 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் அனுப்பப்பட்டது.

தற்போது ஏரி நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் மத்திய சென்னை, கே.கே.நகர், போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வினியோகம்

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

வீராணம் ஏரி வரண்டு போனதால் அங்கிருந்து கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், கல்லணையில் உள்ள கீழணை, வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு 920 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 47.50 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரியின் தற்போதைய நீர் மட்டம் 45.6 அடியாக உள்ளது.

இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி மூலம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் மையங்களில் இருந்து 200 மில்லியன் லிட்டரும், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து 220 மில்லியன் லிட்டர் என மொத்தம் 600 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீர் நிறுத்தம்

நெய்வேலியில் உள்ள சுரங்கம் மற்றும் பரவனாற்றில் உள்ள ஆழ்குழாய்கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீர், 70 முதல் 80 மில்லியன் லிட்டர் வரை வீராணம் குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுவதால் பரவனாற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story