அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி போலீசில் புகார்
திண்டுக்கல் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அதில், பழனி தாலுகா புளியம்பட்டியை சேர்ந்த ஜான்மூர்த்தி, முன்னிலைக்கோட்டையை சேர்ந்த சிலர் என்னை சந்தித்து பேசினர். அப்போது எனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். அதை உண்மை என நம்பி கடந்த ஆண்டு ரூ.4 லட்சத்து 3 ஆயிரம் கொடுத்தேன்.
ஆனால், அதன்பின்னர் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்ட போது அதையும் தரவில்லை. இந்த நிலையில் ஜான்மூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். நான் வட்டிக்கு வாங்கி பணத்தை கொடுத்தேன். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் ஆரியநல்லூரை சேர்ந்த சாந்தி என்பவர் கொடுத்த மனுவில், ஜான்மூர்த்தி உள்பட சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக என்னிடம் ரூ.2 லட்சம் வாங்கினர். இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார்கள் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜான்மூர்த்தி என்பவரை கொடைக்கானல் போலீசார் கடந்த மாதம் கைது செய்துள்ளனர். எனவே, புகார் மனுக்களை கொடைக்கானலுக்கு மாறுதல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story