திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் ஆந்திராவுக்கு கரும்புகளை கடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் ஆந்திராவுக்கு கரும்புகளை கடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2018 2:58 AM IST (Updated: 15 Aug 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கரும்புகளை ஆந்திராவுக்கு கடத்தும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19-ம் ஆண்டு அரவை பருவம் வருகிற 1-10-2018 தொடங்குகிறது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் 2017-2018-ம் ஆண்டு நடவு பருவத்தில் கரும்பு சாகுபடி செய்து 2018-19-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு தங்கள் கரும்பினை பதிவு செய்துள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் ஆலையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்கள் பதிவு கரும்பு முழுவதையும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மட்டுமே அறுவடை செய்து அனுப்பிட வேண்டும்.

கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19 அரவை திட்டம் மற்றும் ஆலையின் முழு அரவை திறனுக்கும் அதிகமாக உள்ள பதிவில்லா கரும்பை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே தங்கள் பதிவில்லா கரும்பை தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தமிழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் பிற சர்க்கரை ஆலைகளுக்கு மட்டுமே அறுவடை செய்து அனுப்பிட விவசாயிகள் அனுமதிக்கப்படுவர்.

ஆந்திராவுக்கு கடத்தினால்

இந்த நிலையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் குறிப்பாக பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிப்பேட்டை, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்துள்ள பதிவு மற்றும் பதிவில்லாத கரும்பு விவசாயிகள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் அனுமதியின்றி தங்களது கரும்பை தன்னிச்சையாக அறுவடை செய்து ஆந்திர மாநிலத்தில் இயங்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் இத்தகைய செயல்பாடுகள் கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுகிற செயலாகும். எனவே சட்டவிரோதமான கரும்பு கடத்தலில் ஈடுபடும் கரும்பு விவசாயிகள், தரகர்கள், கரும்பு கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் சட்ட விரோதமாக கரும்பு அறுவடையில் ஈடுபடும் கரும்பு வெட்டும் ஆட்கள் அனைவர் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவு மற்றும் பதிவில்லாத கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் ஆலையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், சர்க்கரை ஆலையின் துணை இயக்குனரின் அறிக்கையின் அடிப்படையிலும் செயல்பட்டு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story