சிங்கபெருமாள்கோவில் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்


சிங்கபெருமாள்கோவில் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 15 Aug 2018 3:13 AM IST (Updated: 15 Aug 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவில் சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலை அருகே குடியிருப்பு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக வேலைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை முதல் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்தனர். இதனால் கடை திறக்கும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.

மறியல்

இதனையடுத்து சிங்கபெருமாள்கோவில் பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பேரணியாக சென்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வல்லவன் மற்றும் மறைமலைநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் கடை திறப்பதை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மீண்டும் இதே பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிகள் மேற்கொண்டால் தொடர்போராட்டத்தில் ஈடுபடபோவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story