தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் - 31-ந் தேதி கடைசி நாள்


தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் - 31-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 15 Aug 2018 4:45 AM IST (Updated: 15 Aug 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சேலம் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், படிவம் ஏ.இ.5-ல் விண்ணப்பம் ரூ.2-க்கு நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக்கட்டணம் ரூ.500 கருவூலத்தில், வங்கியில் செலுத்தியதற்கான சலான்.

பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 5 நகல்கள். அந்த இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்துவரி ரசீது. வாடகை கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீதுடன் கட்டிட உரிமையாளரின் சம்மத கடிதம், ரூ.20 மதிப்புள்ள முத்திரை தாளில் சாட்சி கையொப்பத்துடன் இருக்க வேண்டும். மாநகராட்சிக்கு உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது.

3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கீரிட் கட்டிடமாக இருக்க வேண்டும். உரிமம் வேண்டும் இடத்தின் கடைக்கும் மற்றொரு பட்டாசு கடைக்கும் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள கட்டிடத்திற்கும் குறைந்த பட்சம் 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story